பாரதி இளமையிலேயே கவித்திறன் கொண்டவர் என்றாலும் அவரது எழுத்துக்கள் அச்சில் ஏறியதும், முதல் பிரசுரத்தை வெளியிட்டதும் சென்னையில்தான்.
முதல் தொகுப்பை வெளியிடும்போது நடந்த சம்பவம் சுவாரசியமானது. முதலில் புதிய முறையில் பாரத அன்னையின் மீதான பாடல்களை தான் பதிப்பிக்க விரும்புவதால் பாடல்களை அனுப்புமாறு சுதேசமித்திரன் வாசகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால் யாரும் பாடல்களை எழுதி அனுப்பவில்லை. அதனால் தானே பாடல்களை எழுதி சுதேசமித்திரனிலும் இந்தியாவிலும் வெளியிட்டார். அவற்றைத் தொகுப்பாக வெளியிடவும் நினைத்தார். ஆனால் அவர் கையில் பணமில்லை. ஆனால் புத்தகத்தை வெளியிட வேண்டும். என்ன செய்வது?
சுதேசமித்திரன் ஆசிரியரும் தனது நண்பருமான ஜி.ஏ. நடேசனிடம் ஆலோசனை கேட்கிறார். அவரிடமும் பணமில்லை. ஆனால் ஒரு யோசனை கூறினார். “வி. கிருஷ்ணஸ்வாமி ஐயர்தான் உங்கள் ஆசையைப் பூர்த்தி செய்யக்கூடியவர்” என்று கூறினார்.
பாரதியாருக்கு கிருஷ்ணஸ்வாமி ஐயரிடம் போக விருப்பமில்லை. ஐயர் மிதவாத காங்கிரஸ் பிரிவைச் சேர்ந்தவர். பாரதியாரோ தீவிரவாதி. அதிலும் ‘இந்தியா’ பத்திரிக்கையில் வாரந்தோறும் அவரைக் கடுமையாகத் தாக்கி எழுதுவார் பாரதியார். எனவே அவரிடம் பணம் வாங்க பாரதி விரும்பவில்லை.
நடேசன் விடவில்லை. தொடர்ந்து வற்புறுத்தி னார். அதனால் ஒருநாள் மாலை மயிலாப்பூரில் இருந்த கிருஷ்ணஸ்வாமி ஐயருடைய வீட்டிற்கு இருவரும் சென்றார்கள். அப்போது சற்றே இருட்டிய நேரம். நடேசன் புன்முறுவலுடன் “இவர் ஒரு தமிழ் கவிஞர். சில பாட்டுக்களை எழுதியுள்ளார். நிச்சயம் கேட்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று சொல்லிவிட்டு பாரதியாரைப் பாடச் சொன்னார்.
‘வந்தே மாதரம் என்போம்’ உட்பட சில பாடல்களை பாரதியார் பாடினார். கிருஷ்ண ஸ்வாமிக்கு உற்சாகம் தாங்கவில்லை. “இந்த அழகான பாடல்களைப் பரவச் செய்ய வேண்டாமா?” என்று கேட்டார்.
நடேசன் நயமாக, “நீங்கள் மனது வைத்தால்...” என்றார். “அதற்கென்ன தடை. இதோ நூறு ரூபாய். உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டார் கிருஷ்ணஸ்வாமி ஐயர்.
பாரதிக்கு தர்மசங்கடம். நடேசனைப் பார்த்தார். நடேசன் சிரிப்புடன், “இவர்தான் இந்தியா பத்திரிக்கையில் வரும் கட்டுரைகளின் ஆசிரியர் பாரதியார்” என்று பதில் கூறினார். எதிர்பார்த்ததற்கு மாறாக, “நீங்கள்தான் பாரதியாரா! என்ன உயர்ந்த தேசபக்தி உங்களிடம் இருக்கிறது. இது தெரியாமல் உங்களை வெறும் வெறிபிடித்தலையும் தீவிரவாதி என்றல்லவா நினைத்தேன்” என்றாராம்.
இப்படிதான் பாரதியாரின் முதல் தொகுப்பு ‘ஸ்வதேச கீதங்கள்’ என்ற பெயரில் வெளிவந்தது. பதினைந்தாயிரம் பிரதிகளுக்குமேல் அழகிய காகிதத்தில் அச்சடித்து நாடெங்கும் உள்ள பள்ளிக்கூடங் களுக்கும், பொது ஸ்தாபனங்களுக்கு இலவசமாக அனுப்பி வைத்தார் வி. கிருஷ்ண ஸ்வாமி ஐயர்.
மற்றொரு விஷயமும் இந்த தொகுப்பில் உண்டு. இதில் இடம்பெற்ற ‘வந்தே மாதரம் என்போம்’ என்ற பாடலில் ‘தேவி நம் பாரதபூமி’ என்று தொடங்கும் சரணம் இப்போதைய பிரதிகளில் இல்லை. அதற்கு பதிலாக ‘புல்லடிமைத் தொழில் பேணி’என்று தொடங்கும் சரணம்தான் தற்போது காணப்படுகிறது.
பாரதி ஏழைக் கவிஞன் என்ற செய்தி நமக்குத் தெரிந்ததுதான். அதிலும் சென்னைக்கு வந்து ‘சுதேசமித்திரன்’ பத்திரிக்கையில் உதவியாசிரியராக இருந்த துவக்க காலத்தில் அவருக்குப் பணப் பற்றாக்குறை அதிகமாகவே இருந்தது. இந்த விஷயம் சுதேசமித்திரன் முதலாளி ஜி.ஏ. நடேசன் ஐயருக்கும் தெரியும். “பாரதி, நீ காளிதாசன்தான். ஆனால் உனக்கு அட்சர லட்சம் கொடுக்க நான் போஜனாக இல்லையே” என்பாராம்.
பாரதியாரை நடேசன் ஐயர் வேலைவாங்கும் முறையே அலாதியானது. “சீமையிலே சர் ஹென்றி காட்டன் இந்தியாவைப் பற்றி உருக்கமாகச் சொற்பொழிவு செய்திருப்பதைப் பார்த்தாயா” என்று கேட்பார் ஐயர். பாரதியும் “பார்த்தேன். நன்றாக இருந்தது” என்பார். அதை நாளையே நம் பத்திரிக்கையில் வெளியிட வேண்டாமோ என்று கேட்பார் ஐயர். பாரதியும் கட்டாயம் வெளியிட வேண்டும் என்பார்.
அந்தச் சொற்பொழிவை உன்னைத் தவிர யார் மொழிபெயர்க்க முடியும் என்பார். அலுவலகத்தில் வைத்துதான் மொழிபெயர்க்க வேண்டும் என்பதில்லை. வீட்டில் வைத்து விளையாட்டாக மொழிபெயர்ந்துவிடலாம் என்பார். பாரதியாரும் மகிழ்ச்சியுடன் வீட்டில் வைத்து மொழிபெயர்த்துக் காலையில் கொண்டு வருவார்.
இப்படி நடேசன் ஐயர் பாரதியாரை நிறைய வேலை வாங்கினார் என்றாலும் அவை பாரதிக்கு மிகச் சிறந்த பயிற்சியாகவே இருந்தன. விவேகானந்தர் சொற்பொழிவுகள், அரவிந்தரின் பேச்சுகள், காங்கிரஸ் மகாசபையின் தலைமையுரைகள் ஆகியவற்றை விளையாட்டாகவே மொழிபெயர்ந்திருக்கிறார் பாரதியார். இவை எல்லாமே சென்னையில்தான் நடந்தன.
சிறுவர்கள் பாரதியை அணுகி ஏதாவது வேண்டும் என்று கேட்டால் அதை நிறைவேற்ற மிகுந்த முயற்சி எடுத்துக்கொள்வது பாரதியின் வழக்கம். பாரதியார் திருவல்லிக்கேணி, துளசிங்கத் தெருவில் வசித்தபோது அதே தெருவில் சடகோபன் என்ற சிறுவனும் வசித்துவந்தான். அவனுக்கு எப்படியாவது பாரதியைச் சந்தித்து விட வேண்டும், அவர் பாடிக் கேட்டுவிட வேண்டும் என்ற ஆவல். பாரதியாரின் நண்பர் குவளைக் கண்ணனிடம் தனது ஆசையை வெளியிட்டார். அவரும் ‘அதென்ன பிரமாதம்’ என்று சொல்லிவிட்டு சுதேசமித்திரன் அலுவகத்திற்கு சிறுவனை அழைத்துச் சென்றார்.
பாரதியாரிடம் சிறுவனின் ஆவலை வெளியிட்டார். பாரதியார் கீழே இருந்த கிடங்கில் இருந்த இரண்டு காதித மூட்டைகளின் மேல் அவர்களை அமர செய்தார். மற்றொரு மூட்டையில் தான் அமர்ந்துகொண்டு ஐந்தாறு பாடல்களைப் பாடினார். சிறுவன் சடகோபனுக்கு ஆனந்தம் தாங்கவில்லை.
ரைட் சகோதர்கள் விமானத்தைக் கண்டுபிடித்தது இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில்தான். ஒரு சில ஆண்டுகளிலேயே சென்னையிலும் விமானம் செய்ய முடிந்திருக்கிறது. இதை பாரதியார் ஒரு இதழியலாளர் என்னும் முறையில் பதிவு செய்திருக்கிறார். சென்னையில் 1910ஆம் ஆண்டுதான் முதன் முதலில் விமானம் பறந்தது. அப்போது அது பற்றி பாரதியார் இப்படி எழுதினார்: “இவ்விமானம் சென்னையில் டாஞ்சலிஸ் ஹோட்டலின் பிரெஞ்சு முதலாளி டாஞ்சலிஸின் திட்டப்படி சிம்ப்சன் கம்பெனி பட்டறையில் ‘தமிழ் வேலைக்காரர்களால்’ கட்டப்பெற்றது” என்று எழுதினார்.
விமானம் பறந்ததையும் அது சென்னையில் உருவாக்கப்பட்டதையும் மட்டுமின்றி, அதை உருவாக்கியவர்கள் உள்ளூர்த் தொழிலாளிகள் என்பதையும் மறக்காமல் குறிப்பிடுகிறார். அதுதான் பாரதி.
மேலே காணப்படும் சம்பவங்கள் ரா. பத்மநாபன் எழுதிய சித்திர பாரதி (முதல் பதிப்பு: 1957) என்னும் நூலிலிருந்து எடுக்கப்பெற்றவை.


0 comments:
Post a Comment