மழைநீர் சேகரிப்பு என்பது மழைநீரைத் திரட்டி, ஒருங்கே குவித்து, சேமித்து வைப்பது ஆகும். மழைநீரைச் சேகரித்து பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்கு, கால்நடைகளுக்கு, நீர்ப்பாசனம் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்குப் பயன்படுத்தலாம். வீடுகள், நிறுவனங்களின் கட்டடங்களின் மேற்கூரைகளில்இருந்தும் இதற்காகத் தயார் செய்யப்பட்ட தரைவழியாகவும் சேகரிக்கப்படும் மழைநீர் குடிநீருக்கான முக்கியமான ஆதாரமாகப் பயன்படுத்தலாம்.
சில சூழ்நிலைகளில், மழைநீர் ஒன்றே எளிதில் கிடைக்கக்கூடிய, அதிகச் செலவு பிடிக்காத சிக்கனமான நீர் ஆதாரம். இத்திட்டம் உள்ளூரிலேயே கிடைக்கும் விலைமலிவான மூலப்பொருட்களைக் கொண்டு எளிதாகக் கட்டமைக்கப்பட்டு, பெரும்பாலான வசிப்பிடங்களில் வெற்றிகரமாகச் செயல்படுத்தக்கூடியது. கட்டடங்களின் மேற்கூரைகளில் சேகரிக்கப்படும் மழைநீர், பெரும்பாலும் நல்ல தரமானதாகவும் அதிக தூய்விப்புக்கு உட்படுத்தத் தேவையில்லாமலும் இருக்கிறது. வேறுவகை நீர் ஆதாரம் இல்லாத போது, ஆண்டு மழைப்பொழிவு 200மிமீ-க்கு கூடுதலான இடங்களில் குடும்பத்தின் குடிநீர் தேவைக்காக மழைநீர் வடிகால் அமைப்பு ஏற்படுத்துவது சிறப்பானது.
மழைநீர் சேகரிக்க எளிமையானது முதல் சிக்கலானது வரை பல வகையான அமைப்புகளை உருவாக்கலாம். தரைவழியாகவோ கட்டடங்களின் மேற்கூரை வழியாகவோ மழைநீர் சேகரிக்கப்படுகிறது. அமைப்பின் திட்ட அளவு, செயல்திறன், மழைப்பொழிவின் அளவு ஆகியவற்றைப் பொருத்து மழைநீர் சேகரிப்பு வீதம் அமையும்.
நீரில்லாமல் இவ்வுலகில் வாழ முடியாது. மழை பெய்யவில்லை என்றால் தண்ணீரின் இடையறாத ஓட்டமும் இருக்காது. மழை நீரைப்பற்றி இதைவிட அதிகம் பேசத் தேவையில்லை. நீரின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசும் பொழுது, உலக அளவில் நீரைப்பற்றி ஆராய்ச்சி மூலம் கட்டுரை மற்றும் புத்தகம் எழுதிய அமெரிக்க நீரியல் வல்லுநர் முனைவர் சாந்திரா போள்டல் அவர்களின் ‘OASIS’ என்னும் புத்தகத்தில்- 3 ஆவது உலக யுத்தம் என்று ஒன்று வந்தால், அது தண்ணீர்த் தகராறாகத்தான் இருக்கும் என எழுதியுள்ளார்.
நாம் நீரைப்பற்றி நினைப்பது எல்லாம் தண்ணீர் மிகவும் தட்டுப்பாடாக இருக்கும் பொழுதுதான். மழை நீர் எப்பொழுதும் ஒரே அளவுதான் கிடைக்கிறது. ஆனால், மழை ஒரே மாதிரியாக எல்லா வருடங்களிலும் பெய்வதில்லை. நமது நீர்த்தேவைக்கு ஏற்ப மழை வராது. ஆதலால், அதிக அளவில் மழை பெய்யும் காலங்களில் மழைநீரைச் சேகரித்தும், பாதுகாத்தும் மற்றும் மேலாண்மை செய்தும் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
உலகின் மொத்த நீர்வளம் 1.41 பில்லியன் கன மீட்டர் ஆகும். இதில் சுமார் 97.5% கடல் நீராகவும் மற்றும் ஊற்று நீராகவும் உள்ளன. மீதமுள்ள 2.5 சதவிகித நீர்தான் நல்ல நீராகும். இந்த 2.5 சதவிகித தண்ணீரிலும் 2.20 சதவிகிதம் மட்டுமே வட மற்றும் தென் துருவங்களிலும் பனிமலையாகவும், பூமியின் அதிக ஆழத்திலும் கிடைக்கின்றது. மீதியுள்ள 0.30 சதவிகிதம் நீர், நிலத்தடி நீராக குளம் குட்டைகளிலும் மற்றும் ஆறுகளிலும் உள்ளது.
உலகில் உள்ள மொத்த நீர் 100 லிட்டர் என்றால், பயன்படுத்தும் நீர் சுமார் 0.3 லிட்டர்தான். அதில் சுமார் 30 சதவிகிதம் நிலத்தடி நீராகும். உலகில் உள்ள நீர் எப்பொழுதும் சுழன்று கொண்டே இருக்கிறது. இதை ஆங்கிலத்தில் ‘Hydrological Cycle’ என்பார்கள். இந்தச் சுழற்சியாகும் நீர் எப்பொழுதும், எல்லா வருடங்களிலும் ஒரே அளவுதான் இருக்கும். அதன் அளவு சுமார் 5,26,000 கன கிலோ மீட்டர் ஆகும்.
உலகில் கிடைக்கும் நீரை எல்லோரும் சரியாகப் பகிர்ந்து உணவு உற்பத்தியும் செய்தால், உலகில் நீர்த்தட்டுப்பாடு மற்றும் உணவுத் தட்டுப்பாடு எப்பொழுதுமே வராது. ஒரு நாட்டில் அல்லது ஒரு பகுதியில் மொத்தமாக ஒரு வருடத்தில் கிடைக்கும் நீரை அங்கு வாழும் ஜனத்தொகையால் வகுத்தால் கிடைக்கும் அளவு 1700 கன மீட்டருக்கும் அதிகமிருப்பின், அங்கு நீர்த் தட்டுப்பாடே இருக்காது என்பார்கள்.
கிடைக்கும் நீர் 500 கன மீட்டர் எனில், அங்கு கடுமையான நீர்த்தட்டுப்பாடு (Severe Scarcity) என்று பொருள். உலக வங்கியின் கணக்குப்படி தற்பொழுது உலகின் 22 நாடுகளில் ஒரு நபருக்குக் கிடைக்கும் நீரின் அளவு சுமார் 100 கன மீட்டருக்கும் குறைவே. இதுவே இன்னும் 15 – 20 ஆண்டுகளில் உலக மக்கள் தொகையில் 1/3 பங்கு மக்களுக்கு அதாவது 52 நாடுகளில் உள்ள மக்களுக்கு ஒரு நபருக்குக் கிடைக்கும் அளவு சுமார் 1000 கன மீட்டருக்கும் குறைவாக இருக்கும்.
மழை பெய்யும் அளவும், மக்கள் தொகையும் எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியாக இல்லை. ஆதலால்தான் நீர்த் தட்டுப்பாட்டைத் தவிர்க்க, நீர்ச் சலுகை, நீர்ச் சேமிப்பு, மற்றும் நீர் மேலாண்மை முறைகளைக் கண்டிப்பாக இந்தியா முதலான பருவமழையை நம்பியுள்ள நாடுகள் அமல்படுத்த வேண்டும்.
உலகில் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளில் நபருக்குக் கிடைக்கும் நீரின் அளவு (கன மீட்டரில்):
ரஷ்யா = 20,000 க.மீ.
அமெரிக்கா = 10,000 க.மீ.
சைனா =2.500 க.மீ.
இஸ்ரேல் = 450 க.மீ.
இந்தியா= 2,000 க.மீ.
தமிழ்நாடு = 650 க.மீ.
கிடைக்கும் நீரில் அதிக நீர் பாசனத்திற்குத்தான் இந்தியா உட்பட வளரும் நாடுகளில் பயன்படுத்தப் படுகின்றன.
உலகில் இருக்கும் எல்லாப் பகுதிகளிலும் கிடைக்கும் நீரின் அளவு ஒரே மாதிரி சீராக இல்லை. அதே மாதிரிதான் நீரைப் பயன்படுத்தும் விதமும் எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியாக இல்லை.
நீர், குறிப்பாகப் பாசனத்திற்கும், தொழிற்சாலை மற்றும் வீட்டுப் பயன்பாட்டிற்கும் அதிக அளவில் பயன்படுத்தப் படுகின்றது. வளர்ந்த நாடுகளில் விவசாயத்திற்குக் குறைவாகவும், தொழிற்சாலை மற்றும் வீட்டுப் பயன்பாட்டிற்கு அதிகமாகவும் பயன்படுத்துகிறார்கள். ஆனால், இந்தியா உட்பட வளரும் நாடுகளில் பாசனத்திற்கு அதிகமாகவும் மற்ற செயல்பாடுகளுக்கு மிகக் குறைவாகவும் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.
(Inter linking of Rivers in Tamilnadu)தமிழ்நாட்டின் மக்கள்தொகை இந்தியாவின் மக்கள்தொகையில் 6.5 சதவிகிதம். ஆனால், நீர் கிடைக்கும் சதவிகிதம், நீர்வளம் சுமார் 2 சதவிகிதமாக இருப்பதால், மேற்கூறிய நதிநீர் இணைப்பு தமிழ்நாட்டிற்கு மிகவும் இன்றியமையாததாகும். இதை நிறைவேற்ற எல்லோரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்.
தமிழ்நாடு உட்பட இந்தியாவில் பாசனத்திற்கு மட்டும் கிடைக்கும் மொத்த நீரில் சுமார் 85 சதவிகித நீர் பயன்படுத்தப்பட்டு மக்களுக்குத் தேவையான உணவு உற்பத்தி செய்யப்படுகிறது.
நீர்ப்பாசனம் என்பது ஒரு வாழ்வியல். இது உலகில் நாகரிகம் தொடங்கும் பொழுதிலிருந்து நடைபெற்று வருகிறது. உலகத்திற்கு இது ஒரு புது விஞ்ஞானம். அதாவது The Science of Survival மக்கள் உயிர் வாழ்வதற்கான விஞ்ஞானம் எனலாம்.
நீரைத் தேக்குவதற்குப் பெரிய அணை தேவையா? வேண்டாமா? என்ற சர்ச்சை நடைபெற்று வருகின்றது. இதில் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகட்கும், பொறியாளர்கட்கும் கருத்து முரண்பாடு உள்ள நிலையில், உலகில் எங்கெங்கு, எவ்வளவு பெரிய அணைகள் கட்டப்பட்டுள்ளன என்பதைக் கீழே காணலாம்.
130 கோடி மக்கள் தொகை கொண்ட சீனாவில் 22 ஆயிரம் பெரிய அணைகள் கட்டப்பட்டுள்ளன. 30 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்காவில் 6675 அணைகளும், 121 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 4291 அணைகளும், 10 கோடி மக்கள் தொகை கொண்ட ஜப்பானில் 2675 அணைகளும், 4 கோடி மக்கள் தொகை கொண்ட ஸ்பெயின் நாட்டில் 1195 அணைகளும் கட்டப் பட்டுள்ளன. உலகில் மொத்தமாக உள்ள பெரிய அணைகள் சுமார் 45 ஆயிரம் ஆகும். அமெரிக்காவில் அணைகள் மூலம் நீர் சேமித்து வைக்கும் நீரின் அளவு சுமார் 65 மில்லியன் எக்டர் மீட்டர் ஆகும். ஆனால், இந்தியாவில் 54 மில்லியன் எக்டர் மீட்டர்தான்.
நைல் நதியின் மேல் கட்டியிருக்கும் அஸ்வான் அணையின் கொள்ளளவு நைல் நதியில் இரண்டு வருடம் ஓடும் மழை நீரின் அளவாகும். அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் உள்ள பவுல்டர் அணை (Boulder Dam) கட்டிய பிறகு, அந்த அணையிலிருந்து ஒரு சொட்டு நீர் கூட உபரி நீராக வெளியே செல்வதில்லை. இந்தியாவில் 30 சதவிகித நீரைக்கூட நாம் நதிகளில் தேக்கி வைப்பதில்லை.
தமிழ்நாடு ஏற்கெனவே ஒரு நீர்த்தட்டுப்பாடான மாநிலமாகும். ஆனால், இந்திய உபகண்டத்தில் தேவைக்கு அதிகமாக நீர் உள்ளது. ஆகையால்தான் நீர் உபரியாக உள்ள பகுதிகளான வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளிலிருந்து தென் மாநிலங்களுக்கு, குறிப்பாகத் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவரப் பல திட்டங்கள் இருப்பினும் அதற்கான உரிய முயற்சி இல்லை.
தமிழ்நாட்டின் தேவைக்கு நாட்டின் நதி நீர் இணைப்பு அவசியமாக இருப்பினும், அதைச் செயல்படுத்தக் காலதாமதம் ஏற்படுகின்றது. அதற்கிடையில் தமிழ்நாட்டில் பெய்யும் மழையைச் சேகரித்து நல்ல முறையில் மேலாண்மை செய்து நமது தேவையை ஓரளவு சரிக்கட்ட முயல வேண்டும். அதை எவ்வாறு செய்வது?
1. செயற்கை முறையில் நிலத்தடி நீரைப் பெருக்குதல் (Artificial Recharge).
2. மழை நீரைச் சேமித்து வைக்க அதிக அளவில் சிறிய மற்றும் பெரிய நீர்த்தேக்கங்களைக் கட்டுவது.
3. நகராட்சிக் கழிவு நீரையும் (Sewage Water) மற்றும் தொழிற்சாலைக் கழிவு நீரையும் சுத்தப்படுத்திப் பாசனத்திற்கும் மற்ற காரியங்களுக்கும் பயன்படுத்துதல்.
4. பருவ காலத்தில் ஏற்படும் வெள்ள நீரைப் பூமிக்கு மேலே/ கீழே சேகரித்து வைத்துப் பயன்படுத்துதல்.
5. கடல் நீரில் உப்பை அகற்றிக் குடிநீராக மாற்றிப் பயன்படுத்துதல்.
6. நிலத்தை நீர்வடிப் பகுதியாகப் பிரித்து (Water Shed) மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு முறையை ஒழுங்காகவும் மற்றும் முழுமையாகவும் செய்தல்.
இதைத் தவிரப் பாசனம் உள்பட நீரைப் பயன்படுத்திடும் நீர் மேலாண்மையை ஊக்குவித்தல். அவற்றில் முக்கியமானவை:
* பாசனத் திறனை அதிகரித்தல் : தற்பொழுதுள்ள ஏரி மற்றும் கால்வாய்ப் பாசனத்தின் 30-40 சதவிகிதத் திறனை 50 சதவிகிதமாகவும், கிணற்றுப் பாசனத் திறனை 65 சதவிகிதத்திலிருந்து 80 சதவிகிதமாகவும் அதிகப்படுத்த ஆவணம் செய்தல்.
* நெல் சாகுபடிக்குப் பாசன நீரில் 72 சதவிகிதம் பயன்படுத்தப் படுகின்றது. இந்த நீரின் அளவைக் கணிசமாகக் குறைக்கலாம். அதற்கு SRI மடகாஸ்கர் பாசன முறையைப் பயன்படுத்தி, நீரின் தேவையை 40-50 சதவிகிதத்தைக் குறைத்தும், உற்பத்தியில் 30-40 சதவிகிதம் அதிகமாகவும் எடுத்தல்.
* சொட்டு நீர் மற்றும் தெளிநீர்ப் பாசன முறையை அதிகப் பரப்பில்- அதாவது 10 லட்சம் எக்டரில் பயன்படுத்துதல்.
* ஒரு யூனிட் நீரைக் கொண்டு அதிக மகசூல் எடுத்தல் (More area per drop of water).
* நீர் கிடைக்கும் அளவைப் பொறுத்துப் பயிர் மாற்றம் செய்தும் சிக்கனப் பாசன முறையைப் பயன்படுத்துதல்.
* கழிவு நீரைச் சுத்தப்படுத்திப் பயன்படுத்துதல்.
மேற்கூறிய தொழில் நுட்பத்தை விவசாயிகள் பயன்படுத்தி நீர்த்தேவையைச் சமாளிக்க முயல வேண்டும்.
இதைத்தவிர, கீழ்க்காணும் நீண்டகாலத் திட்டங்களையும் எதிர்வரும் ஆண்டுகளில் செயல்படுத்தி நமது தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
* மேற்கே வீணாக ஓடி அரபிக் கடலில் கலக்கும் நீரைக் கிழக்கே திருப்பி விடுதல்- குறிப்பாகக் கேரளா (500 டி.எம்.சி) மற்றும் கர்நாடகா (2000 டி.எம்.சி) மாநிலங்களிலிருந்து.
* மகாநதி, கோதாவரி உபரி மழை நீரை (1000 டி.எம்.சி.) கிருஷ்ணா, காவிரி மற்றும் வைகை ஆறுகளுடன் கலத்தல்.
* தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ஆறுகளை இணைத்தல்


0 comments:
Post a Comment